புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரில் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் 18-ம் படி திறப்பு இன்று நடக்கிறது
18-ம் படி திறப்பு
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, நேருநகரில் பிரசித்தி பெற்ற தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் உள்ளது போல் 18 படிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை 18-ம் படி திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாதத்தின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 18-ம் படி நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் அய்யப்பனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் 18-ம் படி வழியாக ஆண், பெண் பக்தர்கள் இருபாலரும் ஏறி அய்யப்பனை தரிசனம் செய்யலாம். மாலையில் அலங்கார பூஜையும், இரவு 7 மணிக்கு 18-ம் படிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.