மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது


மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சென்னை

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும், கொடி மரத்தை 5 முறையும் 'அய்யா அரஹர சிவ' என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. காலை பால்பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வந்தார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

விழாவில் தினமும் இரவு அலங்கரிப்பட்ட அன்னவாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திர வாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 9 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார். தேரோட்டத்தை சிறப்பு அழைப்பாளர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்டசோபனம், அண்டநாமம், திருநாமக்கொடி இறக்குதல், பள்ளியுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழா நாட்களில் பக்தர்கள் சென்றுவர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம், நவீன கழிப்பறைகள், உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.


Next Story