புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 Sep 2023 9:59 PM GMT (Updated: 23 Sep 2023 10:04 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஈரோடு

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அந்தியூர் பேட்டை பெருமாள்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். அதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோவிலில் கோமாதா பூஜையும் நடைபெற்றது.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவிலில் வாசனை திரவியங்களால் பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அத்தாணி சஞ்சீவராயன் கோவில், பருவாச்சி கரிய வரதராஜ பெருமாள் மலைக்கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி தீர்த்தமும், வெண் பொங்கலும் வழங்கப்பட்டது.

கோபி கரிவரதராஜ பெருமாள்

கோபி அருகே உள்ள மூலவாய்க்கால் ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 7 மணி அளவில் சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் உற்சவர் தேரில் எழுந்தருள செய்யப்பட்டார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க மலை கோவிலை சுற்றி தேரை இழுத்து வந்தனர்.

இதேபோல் கோபி, பாரியூர், மொடச்சூர், கொளப்பலூர், அழுக்குளி, மேட்டுவளவு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோபி அருகே கூகலூரில் சிவ பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சாமிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சம் பழச்சாறு, திருநீறு, சந்தனத்தால் அபிஷேகம் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் காவிரிக்கரையில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள். இச்சிப்பாளையம் கோனப்பெருமாள், கிழக்காலூர் பெருமாள், வடக்குப்புதுப்பாளையம் லட்சுமி நரசிம்மர், பால ஆஞ்சநேயர், கொளாநல்லி பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள், பனப்பாளையம் ராமர் சன்னதி, கொளத்துப்பாளையம் சீதாராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கொடுமுடி

கொடுமுடியில் உள்ள பிரசித்திபெற்ற வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடனான வீரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொடுமுடி சுற்றுவட்டாராத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கோவிந்த கோவிந்தா என பக்தி கோஷமிட்டு பெருமாளை வணங்கினர். இதேபோல் ஏமகண்டனூர் ஆச்சியம்மன் கோவிலில் உள்ள லட்சுமி நாராயணர் சன்னதி, வெங்கம்பூர் வரதராஜ் பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நம்பியூர்

நம்பியூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விக்ரம நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story