12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கட்டாயம் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும் - கலெக்டர் சாந்தி அறிவுறுத்தல்
தர்மபுரி
12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் சாந்தி அறிவுறுத்தினார்.
வழிகாட்டும் நிகழ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தர்மபரி கோட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் உயர்வுக்கு படி நிகழ்ச்சி தர்மபுரி குண்டலப்பட்டியில் உள்ள பச்சமுத்து கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு கையேட்டை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் உயர்கல்வி பயின்ற மாணவர்களின் வேலைவாய்ப்பிற்காகவும், 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான வழிகாட்டுதல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதன்படி நான் முதல்வன் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.
தொடர வேண்டும்
அந்தவகையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ- மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் உயர்வுக்கு படி நிகழ்ச்சி முதற்கட்டமாக நடைபெறுகின்றது. மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும். இதுவரை உயர்கல்வி தேர்வு செய்யாத மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்குரிய கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். எந்த கல்லூரியில் எந்த பாடப்பிரிவினை தேர்வு செய்தால் நல்ல வேலைவாய்ப்பை பெற முடியும் என அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்றவாறும், மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்றவாறும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர் சேர்க்கைக்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி நல்ல முறையில் உயர்கல்வி பயின்று தங்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை பாரதியார் பல்கலைக்கழக தொழில்நெறி வழிகாட்டியாளர் விஸ்வகேஷ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி் பேசினர். இதில் உதவி கலெக்டர் கீதா ராணி, கல்லூரி கல்வித்துறை மண்டல இணை இயக்குநர் ராமலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், நான் முதல்வன் திட்ட கண்காணிப்பு அலுவலர் டேரிஸ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.