மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு


மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு
x

மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்ய மணலி மண்டல அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இ-சேவை மைய கதவில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதில் பெண் ஊழியர் மயக்கம் அடைந்தார்.

சென்னை

தமிழக அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் தகுதியில்லை என காரணம் கூறி நிராகரிக்கப்பட்டது.

இவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தேதி குறிப்பிட்டதால் தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், தனியார் நடத்தும் இன்டர்நெட் மையங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதலே மணலி மண்டல அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் குவிந்திருந்தனர். அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே சமயத்தில் இ-சேவை மையத்தில் தங்களது விண்ணப்பம் குறித்த நிலையை அறிய முற்பட்டதால் கூட்டம் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் இ-சேவை மைய அறையில் உள்ள கணினி மற்றும் பொருட்கள் கீழே விழுந்தன. மேலும் அந்த அறையின் கதவில் உள்ள கண்ணாடியும் இந்த தள்ளுமுள்ளுவில் உடைந்து நொறுங்கியது. இந்த கூட்ட நெரிசலில் இ-சேவை மைய ஊழியரான கீதா மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார், அனைத்து பெண்களையும் மண்டல அலுவலகத்தை விட்டு வெளியேற்றி அலுவலக கேட்டை மூடினர். இதனால் நேற்று மண்டல அலுவலகத்தில் நடைபெற இருந்த பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மயக்கம் அடைந்த பெண் ஊழியர் கீதா, மணலி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் மணலி மண்டல அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story