மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது; சங்கத்தினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Oct 2023 9:30 PM GMT (Updated: 22 Oct 2023 9:30 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை தொலைபேசி வழியே நடத்த கூடாது என்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு துறை ரீதியாக வழங்கப்படும் திட்டங்கள் முழுமையாக அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர்? என கணக்கெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நடைமுறைக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு என்பது நேரில் சென்று தான் எடுக்க வேண்டும். தொலைபேசி வழியாக விசாரித்தால் முழுமையான விவரங்கள் பெற முடியுமா?. காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை செய்கை மொழி மூலமாகத்தான் தொடர்பு கொள்ள முடியும். எனவே தொலைபேசி வழியாக அழைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் எவ்வாறு பெற முடியும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொலைபேசி வாயிலாக மாற்றுத்திறனாளிகள் பற்றிய கணக்கெடுப்பை நிறுத்த வேண்டும். மேலும் நேரடியாக பணியாளர்கள் சென்று கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story