வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை மூலம் 'கியூஆர்கோடு' அட்டைகள்


வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை மூலம் கியூஆர்கோடு அட்டைகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரிகளுக்கு அஞ்சல் துறை மூலம் ‘கியூஆர்கோடு' அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் வியாபாரிகளுக்கு அஞ்சல் துறை மூலம் 'கியூஆர்கோடு' அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கியூஆர்கோடு அட்டை

மத்திய அரசு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இதன்படி பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய அளவிலான கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'கியூஆர்கோடு' அட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த நிலையில் கடைகளில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதியாக 'டாக்பே' என்ற பெயரில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக 'கியூஆர்கோடு'களை தபால்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்திய அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் இருப்புத்தொகை இல்லாத பிரீமியம் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற வசதியாக இந்த 'கியூஆர்கோடு' அட்டை வழங்கப்படுகிறது. இந்த டாக்பே 'கியூஆர்கோடு' அட்டையின் மூலம் கடைகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து டிஜிட்டல் முறையில் பணம் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெறும் பணம் வியாபாரிகளின் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வந்துவிடும். அந்த பணத்தை தங்களின் தேவைக்கு ஏற்ப தங்களது ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். வியாபாரிகள் இந்த சேவையை ராமநாதபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

ஜூலை 31-ந்தேதி வரை..

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் ஏற்கனவே சேமிப்பு கணக்கு உள்ள வியாபாரிகள் தங்களின் ஆதார் நகல், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் கொடுத்து இந்த 'கியூஆர்கோடு' அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு கணக்கு இல்லாதவர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து புதிதாக பிரீமியம் சேமிப்பு கணக்கு தொடங்கி டாக்பே 'கியூஆர்கோடு' அட்டையை பெற்றுக்கொள்ளலாம். வியாபாரிகள் இந்த சேவையை பெற ஜூலை 31-ந்தேதி வரை ராமநாதபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக வரமுடியாதவர்கள் 9842916984 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் இந்த சேவையை உங்கள் கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள் இந்த சேவையை பெற்று பயனடையுமாறு ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Related Tags :
Next Story