நுகர்வோருக்குத் தரமான பால்; உற்பத்தியாளருக்கு நியாயமான கொள்முதல் விலை - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
"உலக பால்வள உச்சி மாநாடு" நொய்டாவில் நடைபெறுவது இந்தியாவிற்கும், பால்வளத்துறைக்கும் பெருமைக்குரிய நிகழ்வு என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தொழிலாளர் நல அணி செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுமார் 52 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களால் உருவான வெண்மைப் புரட்சியால் இந்தியா தற்போது பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உலகளவில் முதலிடத்தில் இருக்கும் நாடாக திகழும் வேளையில் சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேசம், நொய்டாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் "உலக பால்வள உச்சி மாநாடு" நடைபெறுவது இந்தியாவிற்கும், பால்வளத்துறைக்கும் பெருமைக்குரிய நிகழ்வாகும்.
210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து, உலகளவில் 23% பங்களிப்போடு இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை, கால்நடைகளுக்கான மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ளதா..? இந்தியா முழுவதும் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்கிறதா..? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நிற்கிறது.
ஏனெனில் பால் உற்பத்தியில் குஜராத் அமுல், கர்நாடகா நந்தினி, தமிழ்நாடு ஆவின், கேரளா மில்மா, ஆந்திரா விஜயா, புதுச்சேரி பான்லே போன்ற அந்தந்த மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களைத் தவிர தனியார் பால் நிறுவனங்கள் உரிய கொள்முதல் விலை வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அது மட்டுமின்றி தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களை விட மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், உத்தர்காண்ட் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தரமற்ற, அதிகளவில் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்கள் கலப்படம் செய்யப்பட்ட பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலமும், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் மூலமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஆனால் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதையும், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அதுகுறித்து கவலை கொள்ளாமல் இருப்பது பால்வளத்துறையின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
அதுமட்டுமல்ல "LSD" எனப்படும் "தோல் கட்டி நோய்" (Lumpy Skin Disease) கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே பஞ்சாப், ஹிமாச்சல்பிரதேசம், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் லட்சக்கணக்கான பசுக்களுக்கு பரவியதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து போயுள்ளன. அதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு கால்நடைகள் மீது முதலீடு செய்ய முடியாமலும், அந்நோய் தொற்று காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் போதிய வருமானம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும், பசு மாடுகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க பொருளாதார வசதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.
எனவே உலக பால்வள உச்சி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு கலப்படம் இல்லாத தரமான பால் கிடைப்பதையும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பத்தாண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அதை நடைமுறைபடுத்தாததால் இனிமேலாவது அதனை அமுலுக்கு கொண்டு வருவதை இந்த தருணத்தில் உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் வடமாநிலங்களில் பசுக்களுக்கு பரவி வரும் "தோல் கட்டி நோய்" (LSD) அம்மாநிலங்களில் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவைப்படும் கால்நடை மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இருப்பதையும் தீவிரமாக கண்காணித்து அதனையும் உறுதி செய்வதோடு மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தாமதமின்றி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மத்திய அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.