பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டது.
தேர்வு முடிவடைந்தது
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 15-ந்தேதியும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கடந்த 19-ந்தேதியும், 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு கடந்த 20-ந்தேதியும், 4 முதல் 5-ம் வகுப்புகளுக்கு கடந்த 21-ந்தேதியும் காலாண்டு தேர்வு தொடங்கியது.
6, 8, 10, 12-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11-ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடந்தது. 1 முதல் 3-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 22-ந்தேதியுடன் காலாண்டு தேர்வு முடிந்தும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 4 முதல் 10-ம் வகுப்புகளுக்கு நேற்று இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வும், 11-ம் வகுப்புக்கு கணிதம், விலங்கியல், வணிகவியல், விவசாய அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்வும், 12-ம் வகுப்புக்கு வேதியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடங்களின் தேர்வும் நடைபெற்றது.
துள்ளிக் குதித்து...
நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்ததால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் விடுமுறை விடப்பட்டதால் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும், இன்று (வியாழக்கிழமை) மிலாடி நபி அரசு விடுமுறை என்பதாலும் நேற்று பெரம்பலூர்-அரியலூரில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 3-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 9-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.