மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை; மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்


மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை; மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்
x

மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தற்போது அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது. அதேபோல் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பொழுதை கழிக்க பல ஊர்களில் இருந்து பள்ளி மாணவர்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக சுற்றுலா வர ஆரம்பித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளி பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து வந்ததை காண முடிந்தது. அப்போது பல்லவர்களின் கைத்திறனால் உருவாக்கப்பட்ட மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பற்றிய வரலாற்று தகவல்களை உடன் வந்த வரலாற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கி கூறினர். அவர்களும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

நேற்று வெயில் கடுமையாக வாட்டி வதைத்ததால் கடற்கரையில் வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் பலர் கடலில் குளித்து மகிழந்ததை காண முடிந்தது. பல பயணிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைபிடித்த நிலையில் சுற்றி பார்த்தனர். நேற்று தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.

அங்கு புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இதற்கிடையே சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப பஸ் ஏறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்ததை காண முடிந்தது.

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா வழிகாட்டிகள், பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story