விக்டோரியா மகாராணி, ஜார்ஜ் மன்னர்காலத்தில் வெளியிட்ட நாணயங்கள்


தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்டோரியா மகாராணி, ஜார்ஜ் மன்னர் காலத்தில் வெளியிட்ட நாணயங்களை திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள்,, பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், அவற்றை படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், பழங்கால நாணயங்களை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு சேகரித்து வருகின்றனர். இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜகுரு கூறியதாவது:-

விக்டோரியா மகாராணி

9-ம் வகுப்பு மாணவன் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவன் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ நாணயங்களை கீழவலசை, சேதுக்கரை பகுதிகளில் கண்டெடுத்து உள்ளனர்.

மாணவன் பிரவின்ராஜ் கீழவலசையில் கண்டெடுத்ததில், ஒன்று கி.பி.1833-ல் வெளியிடப்பட்ட நாணயம் ஆகும். இதன் ஒருபுறம் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு போன்றும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவார்ட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. கால் அணா மதிப்புள்ளது. மேலும் அதில் இந்தியா-1887 என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் படமும் உள்ளது. அரசியாய் இருந்த விக்டோரியா, பேரரசியாக கி.பி.1876-ல் பிரகடனப்படுத்தப்பட்டார். இதனால் கி.பி.1877-க்குப்பின் வந்த நாணயங்களில் அவர் எம்பரஸ் (பேரரசி) என குறிப்பிடப்படுகிறார். மாணவன் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த இரண்டு நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளியிடப்பட்டது. இது சிறிய அளவில் உள்ளது.

6-ம் ஜார்ஜ் மன்னர்

இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் 1/12 அணா எனவும். மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது. மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப்பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது. அதன் பின்புறம் 6-ம் ஜார்ஜ் எம்பரர் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது. திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துவருகிறது நீராடிய பிறகு ஆடை, நாணயங்களை கடலில் விட்டுச் செல்கிறார்கள். அய்யப்பன் கண்டெடுத்த காசுகள் அவ்வாறு விட்டவையாக இருக்கலாம்.

பிரவின்ராஜ் கண்டெடுத்தவை மக்களின் சேமிப்பில் இருந்ததாக உள்ளது. திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில், கீழே கிடந்த பாண்டியர், சோழர் கால நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story