காதலியை கேலி கிண்டல் செய்ததால் ஆத்திரம்; நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர்


காதலியை கேலி கிண்டல் செய்ததால் ஆத்திரம்; நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர்
x

காதலியை கேலி கிண்டல் செய்ததால் நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (வயது 26). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேபோல் வியாசர்பாடி சஞ்சய் நகர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் என்ற குள்ளா (24). இவர், எலக்ட்ரீசியன் ஆவார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

பிரதீப்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரதீப்குமாரின் காதலியை சிவா கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி சஞ்சய் நகர் பூங்கா அருகே இது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த பிரதீப்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவாவின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சிவா, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று வியாசர்பாடி மார்க்கெட் பகுதியில் பதுங்கி இருந்த பிரதீப்குமாரை கைது செய்தனர்.


Next Story