தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரம்: நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர் - தாயுடன் கைது


தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரம்: நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபர் - தாயுடன் கைது
x

அம்பத்தூரில் தங்கையை காதலிக்க கூடாது என்றதால் ஆத்திரத்தில் நண்பரை கத்தியால் வெட்டிய வாலிபரை அவரின் தாயுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். பட்டாபிராமை சேர்ந்தவர் மதியழகன் (21). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

மனோஜ்குமாரின் தங்கையை மதியழகன் காதலித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மனோஜ்குமார், தனது தங்கையை காதலிக்க கூடாது என மதியழகனை கண்டித்தார். மேலும் தனது தங்கையிடமும், மதியழகன் நல்லவன் கிடையாது. அவனை காதலிக்காதே. அவனிடம் பேசுவதை நிறுத்தி விடு என்றும் அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மதியழகன், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் மனோஜ்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் நண்பன் என்றும் பாராமல் மனோஜ்குமாரை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகன், அவருடைய தாய் நிறைமதி (39) மற்றும் உறவினர்களான ராஜ்குமார் (39), ஹரி (54) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story