மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
மேலூர்,
மேலூர் அருகே வெள்ளலூரில் மந்தைகருப்பணசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. முன்னதாக கிராமத்தினர் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து காளைகள் ஆங்காங்கே அவிழ்த்துவிடப்பட்டன. இதை தொடர்ந்து அந்த காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் தப்பி ஓடின. மாடுகள் முட்டி சுமார் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மற்றும் மதுரை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.