மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி


மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த ராகுல்காந்தி
x
தினத்தந்தி 26 Dec 2022 11:48 PM IST (Updated: 27 Dec 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை யாத்திரை) என்ற பெயரில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். இந்த பாதயாத்திரை 3,570 கி.மீ. தொலைவிலானது. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களைக் கடந்து தலைநகர் டெல்லிக்கு சென்றடைந்தது.

இந்த யாத்திரை டெல்லி செங்கோட்டையை நெருங்கிய தருணத்தில் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசன் இணைந்து நடந்தார். செங்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது கூட்டத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்தார்.

இந்நிலையில் மக்கள்நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தியை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் டுவிட்டரில், " மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மக்கள் நலனுக்காகவும், தேச ஒற்றுமைக்காகவும், சக இந்தியனாக 'பாரத் ஜோடோ யாத்திரையில்' பங்கேற்றமைக்காக மநீம தலைவருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்திற்குமேல் நீடித்த உரையாடலின்போது, இந்திய அரசியல் சாசனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், மக்களிடையே பிளவையும், வெறுப்பையும் பரப்பும் மதவாத அரசியலுக்கு மாற்றாக, ஒற்றுமை, அன்பை விதைக்கும் காந்திய அரசியலின் அவசியம் குறித்தான தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களின் நலனைப் பாதுகாத்தல், கிராம சுயாட்சி, மொழித் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தனர்" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.



Next Story