பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தடம் புரண்டது


பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் தடம் புரண்டது
x

மதுரை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒரு ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மற்ற ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மதுரை

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒரு ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மற்ற ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

என்ஜின் மாற்றம்

மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி பொதிகை என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரையிலான ரெயில்பாதை மின்மயமாக்கப்படவில்லை.

இதனால், இந்த ரெயில் செங்கோட்டையில் இருந்து வரும் போது மதுரை வரை டீசல் என்ஜினிலும், மதுரையில் இருந்து மின்சார என்ஜினும் பொருத்தி இயக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு சிறிது காலம் இயக்கப்பட்டது. பின்னர் மீண்டும் நிர்வாக காரணங்களுக்காக கடந்த மார்ச் மாதம் முதல் மதுரையில் இருந்து என்ஜின் மாற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து செங்கோட்டை புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.

தடம் புரண்டது

பின்னர், அந்த ரெயிலில் மின்சார என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரெயில் மதுரையில் இருந்து செங்கோட்டை புறப்பட்டு சென்றது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கான மின்சார என்ஜினை வழக்கம்போல, ரெயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் அருகே நிறுத்துவதற்காக கொண்டு சென்றனர்.

அப்போது, 3 மற்றும் 4-வது பிளாட்பாரங்களுக்கு செல்லும் தண்டவாளங்கள் இணையும் இடத்தில் ரெயிலின் என்ஜினில் உள்ள 3 சக்கரங்கள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறின.

அதனை தொடர்ந்து அந்த ரெயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. அத்துடன், பல்வேறு ரெயில்களில் வெளியூர் செல்ல வந்திருந்த பயணிகளுக்கு எந்த பிளாட்பாரத்தில் இருந்து எந்த ரெயில் புறப்படும் என்ற தகவல் தெரிவிக்க முடியாததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

தாமதம்

இதற்கிடையே, மதுரையில் இருந்து செகந்திராபாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் நேற்று காலை 5.30 மணிக்கு பதிலாக காலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.10 மணிக்கு பதிலாக காலை 7.20 மணிக்கும், மதுரை-பழனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் காலை 7.20 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கும், மதுரை-தேனி சிறப்பு ரெயில் காலை 8.05 மணிக்கு பதிலாக காலை 8.40 மணிக்கும் புறப்பட்டு சென்றன.

பின்னர், தடம்புரண்ட என்ஜின் மீட்பு நடவடிக்கைக்காக காலை 7.25 மணி முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பின்னர் என்ஜின் சக்கரங்களை தண்டவாளத்தில் நிறுத்திய பின்னர் அந்த என்ஜின் அங்கிருந்து வழக்கமாக நிறுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

2-வது சம்பவம்

மதுரை ரெயில் நிலையத்தில் தடம் புரளும் சம்பவம் 2-வது சம்பவமாகும். இதுதவிர கடந்த 4 மாதங்களில் 2 முறை கூடல்நகரிலும் ரெயில்கள் தடம் புரண்டு உள்ளன. அதாவது கடந்த ஏப்ரல் 25-ந் தேதி, ஜூன் 20-ந் தேதி, ஜூலை 19-ந் தேதி ஆகிய நாட்களில் சரக்கு ரெயில்கள் தடம் புரண்டன. தொடர்ந்து மதுரையில் ரெயில்கள் தடம் புரளும் சம்பவம் பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story