மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்-முற்றுகை போராட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து, மயிலாடுதுறை ரெயில்வே ஜங்ஷன் அருகில் பூம்புகார்-கல்லணை சாலை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மதியம் 12.35 மணியளவில் வந்த இந்த ரெயில் சுமார் 25 நிமிடம் முற்றுகையிடப்பட்டது.
விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் இந்த போராட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் நாகராஜன், ஸ்டாலின், துரைராஜ், டி.ஜி.ரவிச்சந்திரன், விஜய் மற்றும் 35 பெண்கள் உள்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து 25 நிமிட தாமதத்திற்கு பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. மேலும் இந்த போராட்டம் காரணமாக பூம்புகார்-கல்லணை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி
இதேபோல் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அசோகன், நூர்ஜகான், சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை சீர்காழி போலீசார் கைது செய்தனர்.
செம்பனார்கோவில்
செம்பனார்கோவிலில் ஸ்டேட் பேங்க் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் மார்க்ஸ், ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இதில் போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து கட்சியினரை வங்கியின் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்தனர்.