மத்திய அரசை கண்டித்து வரும் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து வரும் 15-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
நாடாளுமன்றம் என்பது விவாதம் செய்வதற்கான இடம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சில கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது அரசுடைய கடமை. பதில் சொன்னால் தான் எதிர்க்கட்சி பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதா எதிர்க்கட்சி தன்னுடைய கடமையை செய்து விட்டதா என்கின்ற நிலைப்பாடு பொதுமக்களுக்கு தெரியும்.
நாங்கள் ஒன்றும் தவறாக கேட்க வில்லை. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் வளர்ச்சி என்பது வேறு, வீக்கம் என்பது வேறு. குஜராத்தில் அதானி என்ற குறிப்பிட்ட தொழில் அதிபர் வளர்வதற்கு பதில் வீங்கி கொண்டிருக்கிறார். அந்த வீக்கம் நல்லதற்குரியது அல்ல.
அவ்வளவு பெரிய வளர்ச்சி அந்த நிறுவனத்திற்கு எப்படி கிடைத்தது. அதற்கு நாடாளுமன்றத்தில் சரியாக பதில் சொல்லாததால் தான் மோடிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அதற்காகத்தான் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். அதானி, ராகுல் காந்தி உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து தொடர்ந்து போராடுவோம்.
மத்திய அரசை கண்டித்து வருகிற 15-ந்தேதி தமிழ்நாட்டின் 76 இடங்களில் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இறுதியாக உண்ணாவிரதம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.