சிவகங்கையில் இன்று ரெயில் மறியல்-கடையடைப்பு
சிவகங்கையில் இன்று ரெயில் மறியல்-கடையடைப்பு என்று அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை வழியாக செல்லும் ரெயில்களில் பெரும்பாலான ரெயில்கள் சிவகங்கையில் நிற்காமல் செல்கின்றன. இதனால் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் இருந்து சென்னை போன்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர்.
மேலும் காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்றும் தாம்பரம் செங்கோட்டை ரெயிலை சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும் என்று கோரி இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து எந்த பலனும் இல்லாததால் இன்று (சனிக்கிழமை) சிவகங்கையில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து அரசியல் கட்சியினர் வர்த்தக சங்கம் பொது நல அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் அறிவித்திருந்தனர்.
இதையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சமரச கூட்டம் கோட்டாட்சியர் சுகிதா தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சண்முகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம். நகர சபை துணை தலைவர் கார் கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், திராவிட கழக மாவட்ட தலைவர் புகழேந்தி, ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் ராமு, இந்திய கம்யூனிஸ்டு நகர் செயலாளர் மருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மதி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சமரச முடிவு எதுவும் ஏற்படாததால் இன்று கடையடைப்பு, ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.