திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்; எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது


திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல்; எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது
x

டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிப்பதாக தென்னக ரெயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் நிரந்தர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். திருவாரூரில் அனைத்து ரெயில்களுக்கான பணிமனை அமைக்க வேண்டும். மன்னார்குடி-கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் நீடாமங்கலத்தில் மாற்றுவதால் கேட் மூடப்பட்டு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து என்ஜினை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்தும் நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, பேரளம், முத்துப்பேட்டை ஆகிய 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

உரிய நடவடிக்கைஎடுக்கப்படும்

கொரடாச்சேரி கிளரியம் ரெயில்வே கேட் அருகில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நாகை எம்.பி. செல்வராஜ், தி.மு.க.வை சேர்ந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் ரெயிலை மறிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்ததால் அந்த ரெயிலை மறித்து பின்னர் விடுவித்தனர்.

பின்னர் எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அந்த ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. அப்போது திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர், செல்வராஜ் எம்.பி.யை போனில் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

500 பேர் கைது

முன்னதாக போலீசார் மறியலில் ஈடுபட்ட செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை கைது செய்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டம் 3 மணி நேரம் நடந்தது.


Next Story