திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது.


திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது.
x

‘அமுத பாரத் நிலைய திட்டத்தின்’ கீழ் திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதால் முகப்பு பகுதி வாசலை அடைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

'அமுத பாரத் நிலைய திட்டத்தின்' கீழ் திருப்பூர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதால் முகப்பு பகுதி வாசலை அடைத்து தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

பணி ஆரம்பம்

நாடு முழுவதும் 1,309 ரெயில் நிலையங்களை மறுசீரமைக்க 'அமுத பாரத் நிலைய திட்டம்' கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.. இதன் ஒரு பகுதியாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரெயில் நிலையங்கள் ரூ.27 ஆயிரத்து 470 கோடியில் மறுசீரமைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருப்பூர் உள்பட மொத்தம் 18 ரெயில் நிலையங்கள் ரூ.381 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் திருப்பூர் ரெயில் நிலையம் ரூ.22 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை கடந்த 6-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. தற்போது ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையை விரிவு படுத்துவதற்கான முதற்கட்ட பணி நடந்து வருகிறது. மேலும், ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியை விரிவுபடுத்தும் வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

முகப்பு பகுதி அடைப்பு

இதேபோல் ஏற்கனவே இருந்த கான்கிரீட் தளமும் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி காரணமாக முகப்பு பகுதியில் உள்ள வாசல் அடைக்கப்பட்டு, அருகில் உள்ள மதில் சுவரை உடைத்து தற்காலிக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு பயண சீட்டு மற்றும் முன்பதிவு டிக்கெட் வழங்கும் இடம் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தில் நடைமேடை, காத்திருப்பு கூடம் ஆகியவை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

மேலும், பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான வசதிகளை எளிமைபடுத்துதல், ஏ.டி.எம். எந்திரம், பயணிகளுக்கான இணையதள வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. இதேபோல் பன்னடுக்கு வாகன நிறுத்த வசதி மற்றும் ரெயில்வே குடியிருப்பு மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரின் அடையாளத்தை முன்னிறுத்தி ரெயில் நிலைய வடிவமைப்பு வருமா என்ற எதிர்பார்ப்பில் திருப்பூர் மக்கள் உள்ளனர்.



Related Tags :
Next Story