தண்டவாளத்தில் விரிசல்; சென்னை எக்ஸ்பிரஸ் தப்பியது


தண்டவாளத்தில் விரிசல்; சென்னை எக்ஸ்பிரஸ் தப்பியது
x

தண்டவாளத்தில் விரிசலை ரெயில்வே கேங்மேன் கண்டுபிடித்து, துரிதமாக செயல்பட்டு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார். அவரின் செயலை பலரும் பாராட்டினர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

தண்டவாளத்தில் விரிசலை ரெயில்வே கேங்மேன் கண்டுபிடித்து, துரிதமாக செயல்பட்டு, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார். அவரின் செயலை பலரும் பாராட்டினர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.. இந்த ரெயில் நேற்று காலை 6.30 மணிக்கு ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே சென்றபோது அந்த பகுதியில் வழக்கமான பணியில் ஈடுபட்டு இருந்த ெரயில்வே கேங்மேன் வீரபெருமாள், சிவப்பு நிற கொடியை கையில் ஏந்தியபடி ரெயிலை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளார்.

என்ஜின் டிரைவர்

இதைப்பார்த்த என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், சிவப்பு கொடியுடன் வந்து ரெயிலை நிறுத்தியதாக என்ஜின் டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாள பகுதியை என்ஜின் டிரைவர் மற்றும் ெரயில்வே போலீசார் பார்வையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் அதே பாதையில், மெதுவாக இயக்கப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்றது. தொடர்ந்து விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை அகற்றி அந்த இடத்தில் புதிய தண்டவாளத்தை பொருத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு, அந்த பணி பகல் 11 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கிடையே மற்ற ரெயில்களும் வழக்கமான நேரத்தில், அந்த இடத்தில் மெதுவாக இயக்கப்பட்டன.

பாராட்டு

தண்டவாளத்தில் விரிசலை கண்டு உடனடியாக ரெயிலை நிறுத்திய கேங்மேன் வீரபெருமாளின் செயலால் ரெயில்கள் விபத்து அபாயத்தில் இருந்து தப்பின. அவரை ரெயிலில் வந்த பயணிகளும், வாலாந்தரவை கிராம மக்களும் பாராட்டினார்கள்.


Next Story