தலமலை வனப்பகுதியில் பலத்த மழை காட்டாற்று வெள்ளம் 2 தரைப்பாலங்களை மூழ்கடித்தது- போக்குவரத்து பாதிப்பு


தலமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. காட்டாற்று வெள்ளம் 2 தரைப்பாலங்களை மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

தலமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. காட்டாற்று வெள்ளம் 2 தரைப்பாலங்களை மூழ்கடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று காலை முதல் அவ்வப்போது பலத்த மழையாகவும், தூறல் மழையாகவும் பெய்து வந்தது.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, காளிதிம்பம், ராமரணை ஆகிய கிராமங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தரைப்பாலம் மூழ்கடிப்பு

ராமரணை அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் தலமலையில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் வடிந்தது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொட்டகாஜனூர்

அதேபோல் தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, அருள்வாடி, சூசைபுரம், திகனாரை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. சிலர் ஆபத்தை உணராமல் தரை பாலத்தை கடந்து சென்றனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் வடிந்தது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்துவருவதால் விவசாய பயிர் அழுகி வருகிறது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடம்பூர்

டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் மலைக்கிராமத்தை சுற்றியுள்ள குன்றி, மல்லியம்மன் துர்க்கம் போன்ற வனப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கே.என்.பாளையம்-கடம்பூர் வனச்சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பாறை இடுக்குகள் மற்றும் மண் சரிவான பகுதி வழியாக ஓடியது.

சாலையில் ஓடிய வெள்ள நீரை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஆங்காங்கே பெருக்கெடுத்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் மற்றும் போலீசார் அறிவுறித்தி உள்ளனர்.


Related Tags :
Next Story