எலந்தைகுட்டை மேடு பகுதியில் 94.4 மி.மீட்டர் மழை பதிவு
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. எலந்தகுட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 94.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நம்பியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 20 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. எலந்தகுட்டைமேடு பகுதியில் அதிகபட்சமாக 94.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நம்பியூர்
நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் ஓடியது. கரட்டுபாளையம் ஊராட்சி வெங்கமேட்டுபுதூரில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, பருத்தி, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நாசமாகும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'வெங்கமேட்டுபுதூரில் கான்கிரீட் வடிகால் அமைக்கவேண்டும். மழை பெய்யும்போதெல்லாம் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகும்போது அதில் பாம்புகளும் வந்துவிடுகின்றன. இதனால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உடனே வடிகால் அமைத்து தராவிட்டால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்கள்.
நள்ளிரவில் மழை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி மாலையில் மழை கொட்டி தீர்த்தது. 2-வது நாளாக நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. ஈரோட்டிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், பெரியவலசு, முனிசிபல்காலனி, சூரம்பட்டி, ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து சாரல் மழையாக பெய்து கொண்டே இருந்தது.
94.4 மில்லி மீட்டர்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
எலந்தகுட்டைமேடு - 94.4, தாளவாடி - 87, பவானிசாகர் அணை - 79, கொடிவேரி அணை - 73, சத்தியமங்கலம் - 65, நம்பியூர் - 63, குண்டேரிப்பள்ளம் அணை - 60, கோபிசெட்டிபாளையம் - 47.2, வரட்டுப்பள்ளம் அணை - 16, ஈரோடு - 12, பெருந்துறை - 5, கவுந்தப்பாடி - 2.4