கோபி பகுதியில் பலத்த மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்- 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடத்தூர்
கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் அடித்து செல்லப்பட்டது
ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் ஓடியது.
கோபியை அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் கோபியில் இருந்து நம்பியூர் செல்லும் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்துகொண்டு இருந்தது. காருக்குள் 3 பேர் இருந்தனர். இந்தநிலையில் ரோட்டில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் திடீரென கார் அடித்து செல்லப்பட்டது. காருக்குள் இருந்தவர்கள் பயத்தில் அலறினார்கள்.
மீட்பு
இதற்கிடையே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கார் சற்று தூரத்தில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் விழுந்தது. காருக்குள் இருந்த 3 பேரும் உடனே கதவை திறந்துகொண்டு வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் இரவோடு, இரவாக கிரேன் வரவழைக்கப்பட்டு குழிக்குள் இருந்து கார் மீட்கப்பட்டது. தொடர்்ந்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டதால், அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.
மேலும் சாலையில் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருந்ததால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் தாழ்வான இடங்களில் இருந்த 7 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. விவசாய தோட்டங்களிலும் தண்ணீர் புகுந்து தேங்கி நின்றது.