ஈரோட்டில் பலத்த மழையுடன் தொடங்கிய அக்னி நட்சத்திரம்- டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ஈரோட்டில், பலத்த மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் இந்த மழையால் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில், பலத்த மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் இந்த மழையால் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடும் வெயில்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. பின்னர் பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன.

பலத்த மழை

இதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இந்த மழை வலுபெற்று பலத்த மழையாக பெய்தது. அப்போது வானில் கடுமையாக இடி -மின்னல் இருந்தது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதைத்தொடர்ந்தும் மழை விட்டு விட்டு பெய்தது.

இதன் காரணமாக ஈரோட்டில் அகில்மேடு வீதி, முனிசிபல் காலனி, மீனாட்சி சுந்தரனார் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு, கருங்கல்பாளையம், பெரியவலசு, நாடார் மேடு, சத்தி ரோடு, பவானிரோடு, பெரியசேமூர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து வந்தது.

ரெயில் நிலையத்துக்குள்...

ஒருசில இடங்களில் சாலையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது. இதனால் ரோட்டில் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் நடந்து சென்றவர்களும் சிரமப்பட்டனர்.

மேலும் ஈரோடு நாடார் மேடு விநாயகர் கோவில் வீதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. ஈரோடு ஈஸ்வரன் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மழை காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் முழுமையாக நனைந்தனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் ரெயில் நிலையம் முன்பு 2 அடிக்கும் மேல் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

தீப்பிடித்து எரிந்த டிரான்ஸ்பார்மர்

இதனிடையே மழை பெய்து கொண்டிருந்தபோது ஈரோடு அகில்மேடு 3-வது வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளானார்கள். பின்னர் இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ஈரோட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பலத்த மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் இல்லாமல் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

கொடுமுடி- சோலார்

கொடுமுடி, சாலைப்புதூர் சோளக்காளிபாளையம், ஒத்தக்கடை, தாமரைபாளையம் வெங்கம்பூர், பெரியவட்டம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சோலார், வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5.30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஊஞ்சலூர்- சிவகிரி

ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், கொம்பனைப்புதூர், தாமரைப்பாளையம், கருக்கம்பாளையம், தேவம்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய பகுதிகளில் 2½ மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

சிவகிரி, வேட்டுவபாளையம், கவுண்டம்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கன மழை பெய்தது.


Related Tags :
Next Story