தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை; மின்னல் தாக்கி மாடு பலி


தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை; மின்னல் தாக்கி மாடு பலி
x

தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கியதில் மாடு ஒன்றும் இறந்தது.

ஈரோடு

தாளவாடி அருகே சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கியதில் மாடு ஒன்றும் இறந்தது.

தாளவாடி

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் தாளவாடி அருகே உள்ள கல்மண்டிபுரம், ஜீர்கள்ளி, கணேசபுரம், திகினாரை, மல்குத்திப்புரம், இரிபுரம், கும்டாபுரம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் இரிபுரத்தை சேர்ந்த சின்னம்மா (வயது 50) என்பவர் தனது பசு மாட்டை அந்த பகுதியில் உள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த பசு மாடு பரிதாபமாக இறந்தது.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதல் கடுமையான வெயில் அடித்தது. மதியம் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி, நல்லூர், பனையம்பள்ளி, காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

அந்தியூர்

அந்தியூரை அடுத்த பர்கூர் பகுதியில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 9 மணி வரை நீடித்தது. சூறாவளிக்காற்றால் பர்கூர் அருகே இருந்த மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரோட்டில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி சிறிது நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்தனர்.


Related Tags :
Next Story