வால்பாறையில் மழை குறைந்தது: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


வால்பாறையில் பெய்த மழை குறைந்ததால் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பெய்த மழை குறைந்ததால் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

சுற்றுலா பயணிகள்

வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கனமழையாகவும் ஒரு சில சமயத்தில் மிதமான மழையாகவும் பெய்தது.இதனால் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 10-ந் தேதி தேதி சோலையாறு அணை நிரம்பியது. 160 அடி கொள்ளளவை கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர் கனமழை காரணமாக கடுமையான குளிர் நிலவி வந்ததால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக மழை குறைந்து பகலில் வெயில் அடித்து வருகிறது. ஒருசில நேரங்களில் மட்டும் மழை பெய்தது. மழை குறைந்து வெயிலும் வாட்டி வருவதால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் ஆழியாறு வனத்துறையின் சோதனை சாவடியில் வால்பாறை வருபவர்களும் கவியருவிக்கு செல்பவர்களும் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

வாகனங்களும் அணிவகுத்து நின்றது. இதன் காரணமாக வால்பாறை நகரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வால்பாறை பகுதியின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதியிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நேற்று நடை பாதை கடைகளில் வியாபாரம் களைகட்டியது. அதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story