நெல்லையில் பரவலாக மழை; 4 வீடுகள் சேதம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் 4 வீடுகள் சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் 4 வீடுகள் சேதமடைந்தன.
பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள இடங்களில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும்
இதன்பின்னர் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. மதியம் 2 மணிக்கு பிறகு பாபநாசம், அம்பை, சேரன்மாதேவி, கல்லூர், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாஞ்சோலை பகுதியில் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
நேற்று மாநகர பகுதியில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், சந்திப்பு மீனாட்சிபுரம், பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் பிரதான சாலைகள்கூட சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. செங்கோட்டை, புளியரை, மேக்கரை, ஆய்க்குடி பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு பலத்த மழை பெய்தது.
அணை பகுதிகள்
இதேபோல் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 89.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,917 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,204 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணையில் 95.67 அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் 73.65 அடி நீரும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 609 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்குபச்சையாறு அணை நீர்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 49 அடியாகவும் உள்ளது.
3 வீடுகள் சேதம்
நெல்லை மாநகர பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகரில் ஒரு மரம் முறிந்து அந்த பகுதியில் உள்ள 3 வீடுகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகள் சேதமடைந்தன.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
மூலைக்கரைப்பட்டி
இதேபோல் மூலைக்கரைப்பட்டி அருகேயும் ஒரு வீடு இடிந்தது. பருத்திப்பாடு கீழத்தெருவை சேர்ந்தவர்கள் மகாராஜன் (வயது 45). இவருடைய தம்பி மாற்றுத்திறனாளி சின்னத்துரை (39). நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று அதிகாலையில் இவர்களது வீடு இடிந்து விழுந்தது. இதில் மாற்றுத்திறனாளி சின்னத்துரை தங்கும் அறை முற்றிலும் சேதம் அடைந்தது.
அவர் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். மழையில் இடிந்து விழுந்த வீட்டை வருவாய் ஆய்வாளர் சண்முகசுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.