விழுப்புரத்தில் தொடர் மழை குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்
விழுப்புரத்தில் நேற்று பெய்த தொடர் மழைகாரணமாக குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகல் வேளையில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு வேளைகளில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்த நிலையில் நேற்றும் இந்த மழை நீடித்தது.
விழுப்புரம் நகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 6 மணியில் இருந்தே சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை காலை 11.30 மணி வரை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. அவ்வப்போது இடையிடையே பலத்த மழையாகவும் கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு சில மணி நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மாலை 5 மணியில் இருந்து இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
மேலும் விழுப்புரம் சாலாமேடு பிரியதர்ஷினி நகர், சர்வேயர் நகர், வழுதரெட்டி நித்தியானந்தம் நகர், ஆசிரியர் நகர், சுதாகர் நகர், வி.ஜி.பி. நகர், மணிநகர் உள்ளிட்ட குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி போனார்கள்.
மழையின் காரணமாக விழுப்புரம் நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. அதுபோல் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்ட சாலைகளும் மிகவும் மோசக காட்சியளிக்கிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
தொடர் மழையினால் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, கோரையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.