ராமநாதபுரத்தில் மக்களை மகிழ்வித்த மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்யாத நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. இதனிடையே அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே ராமநாதபரம் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் அடிப்பதால் மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர். இரவில் வீடுகளுக்குள் படுக்க முடியாமல் வெப்ப காற்று காரணமாக வெளியில் வந்து காற்று வாங்கி சென்று வருகின்றனர்.
வீடுகளுக்குள் மின்விசிறிகள் ஓடினாலும் இருக்க முடியாத அளவிற்கு வெப்ப தாக்கம் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் செய்வதறியாது திகைத்து வந்த மக்கள் அக்னி நட்சத்திரத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்தநிலையில் வெப்பத்தின் கொடுமையில் சிக்கி தவித்து வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல்வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக்காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கம் பகுதி நிலவுவதால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சாலைகளில் வெள்ளம்
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலையும் பலத்த இடி, மின்னலுடன் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. பல பகுதிகளில் நல்ல மழையாகவும், சில பகுதிகளில் சாரல் மழையாகவும் பெய்தது. ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சிறிதளவு மழைக்கே சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி நின்றது.
மழையை எதிர்பாராமல் வெளியில் அன்றாட பணிகளை மேற்கொள்ள வந்த மக்கள் பாதிப்பேர் நனைந்து கொண்டும் சிலர் மழையை அறிந்து கொண்டு கையில் எடுத்து வந்த குடையை பிடித்து கொண்டும் சென்றனர். காலை நேரத்தில் மழை பெய்ததால் அன்றாட பணிகளுக்கு சென்ற மக்கள் அவதி அடைந்தனர்.
பாதாள சாக்கடை
ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் இளங்கோவடிகள் தெருவில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நடந்து கூட செல்ல முடியாத வகையில் உள்ளது. கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக இந்த நீரை அகற்றி மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த தெரு பகுதியில் முறையாக திட்டமிடாமல் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை என்றும், மோட்டார் வைத்து பம்ப்பிங் செய்து எடுப்பது என்பதுதான் இப்போதைக்கு தீர்வு என்றும் தினமும் இவ்வாறு செய்வது இயலாத காரியம் என்றாலும் முடிந்தவரை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதி கழிவுநீர் குழாய் நிலத்திற்கடியில் மேடாக பதிக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் மேல்எழும்பி வழிந்தோடி வருவதாக கூறப்படுகிறது. இதனை முழுமையாக சரிசெய்தால் மட்டுமே இந்த கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு என்பதால் அதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.