திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் கவலை
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு ஏனாதிமங்கலம், சிறுவானூர், தக்கா, கிராமம், அரசூர், டி.குமாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு வருவார்கள். ஆனால் இந்த விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க போதுமான இட வசதி இல்லாத காரணத்தினால் மாடவீதி மற்றும் தெருக்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். நெல் மூட்டைகளை வாங்க வெளியூர் வியாபாரிகள் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் தேங்கி உள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் தெருக்களில் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை மாற்று இடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.