நெல்லையில் சூறைக்காற்றுடன் மழை


நெல்லையில் சூறைக்காற்றுடன் மழை
x

நெல்லையில் சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்தது. அப்போது பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்தது. அப்போது பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் கேலரி மேற்கூரை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடைபட்டது.

சூறைக்காற்றுடன் மழை

நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த போதிலும் அவ்வப்போது திடீர் மழை பெய்து சூட்டை தணித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி கொளுத்தியது. நேற்றும் மதியம் வரையிலும் வெயில் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

பிற்பகல் 2 மணி அளவில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த சூறைக்காற்றுடன் கூடிய மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மாலையில் பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டரும், நெல்லையில் 1 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

மைதான மேற்கூரை பெயர்ந்து சேதம்

சூறைக்காற்றில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சமீபத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய கேலரி அரங்கம், விளையாட்டு வீரர்கள் அறைகள் போன்றவை புதுப்பித்து கட்டப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேலரி மேற்கூரை சரிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனே மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று, சேதம் அடைந்த மைதான மேற்கூரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''காற்றுடன், மழையும் பெய்ததால் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. எனவே இதுபோன்று கட்டப்பட்டு உள்ள மற்ற கட்டுமானங்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்வோம். அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

மரங்கள் சாய்ந்ததால் மின்தடை

இதற்கிடையே, சூறைக்காற்றில் நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஒருசில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் பல்வேறு மரங்கள் சாய்ந்து விழுந்தன. நுழைவு வாசல், பூங்காவில் நின்றிருந்த மரங்கள் காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள்.

பாளையங்கோட்டை பஸ் நிலையம், தபால் அலுவலகம், நூலகம், திருவனந்தபுரம் சாலை செல்லும் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அங்கு மின் வாரியம், தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள். போலீசாரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

இதேபோல் பல பகுதிகளில் மரக்கிளைகள் விழுந்து மின்கம்பி சேதம் அடைந்ததால் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று மின்கம்பிகளை சீரமைத்து மின் வினியோகம் வழங்கினார்கள்.


Related Tags :
Next Story