மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
மழை
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை காலத்தில் இருக்கும் வெப்பத்திற்கு நிகராக அனல் பறக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. மாலை 6 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் பெய்தது. தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
மரங்கள் சாய்ந்தன
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் பலத்த காற்றால் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி சாலையின் ஓரத்தில் இருந்த பழமை வாய்ந்த வேப்பமரம் சாலை நடுவே சாய்ந்தது. இதேபோல் வீரப்பெருமாள் கோவில் அருகில் உள்ள தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர் சேதமும் ஏற்பட வில்லை. மேலும் பலத்த காற்றுக்கு பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தினர். இந்த மழையால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
அரிமளம்
இதேேபால் கடையக்குடி, வன்னியம்பட்டி, பெருங்குடி, மிரட்டுநிலை, அரிமளம், கே.புதுப்பட்டி, ராயவரம், கடியாப்பட்டி, நெடுங்குடி கீழாநிலைகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. ராயவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பகலில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்தது. இரவு நேரத்தில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விராலிமலை
விராலிமலையில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து வழக்கத்தைவிட காற்று வேகமாக வீசியது. அதனை தொடர்ந்து இரவு 9.15 மணியளவில் திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.