தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட முன்னறிவிப்பில் கூறியிருந்தது.
இந்த நிலையில், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.