மானாவாரி பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அரசு உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க வேண்டும்
மானாவாரி பட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் அரசு உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க வேண்டும் என கடலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
தரமற்ற விதைகள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் மற்றும் மங்களூர் வட்டாரத்தில் நடப்பு மானாவாரி பட்டத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்வார்கள். இதற்கான விதைகளை அரசின் விதை வணிக உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். உரிமம் பெறாத தனியார் ஏஜெண்டுகள் மூலம் விதை வாங்கினால், தரமற்ற விதையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் கோர முடியாது. மேலும் விதைப்பைகளில் காணப்படும் விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பார்த்து, இப்பகுதிக்கும் பட்டத்திற்கும் உரிய ரகங்களின் விதைகளை அவற்றின் காலாவதி நாள் பார்த்து வாங்க வேண்டும்.
எளிதில் தீர்வு காணலாம்
விதைகளை வாங்கும் போது, தவறாமல் விற்பனை ரசீது கேட்டு பெற வேண்டும். இதனால் வரும் நாட்களில் விதை மூலம் எழும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். மேலும் விதைகளை விதைப்பதற்கு முன், மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பிறகே விதைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.