அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்


அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள்  மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்
x

நாமக்கல் மாவட்டத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசும்போது கூறியதாவது:-

பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர் எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் துறையினர் தங்கள் பணிகளை அக்டோபர் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மழைக்காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். வருவாய்துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மாற்று இடங்களையும் அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை

மின்சாரவாரிய அலுவலர்கள், பருவமழைக்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்.

வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தொலைபேசி எண்.1077 மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழை குறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story