ஆலந்தூர், பெருங்குடி பகுதிகளில் ரூ.447 கோடியில் மழைநீர் வடிகால்வாய்


ஆலந்தூர், பெருங்குடி பகுதிகளில் ரூ.447 கோடியில் மழைநீர் வடிகால்வாய்
x

ஆலந்தூர் மற்றும் பெருங்குடி பகுதிகளில் ரூ.447 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6-வது பிரதான சாலை, இந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூ.150.47 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

24 மாதங்களில்..

இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள எம்.சி.என் நகர், வி.ஜி.பி. அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.447 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும். இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் 8 லட்சம் பொதுமக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story