நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகம் முதல் கீழவீதி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி:
வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகம் முதல் கீழவீதி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி சாதாரண கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத்தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-
கென்னடி (தி.மு.க.):- எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியங்கா(அ.தி.மு.க.):- எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். குளம் தூர் வாரும் பணியை தரமாக செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகள் குறித்த பெயர் பலகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
தாட்கோ கடைகளை திறக்க வேண்டும்
முத்துக்குமார் (பா.ம.க.):- வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
ராஜ கார்த்திக் (அ.தி.மு.க.):- பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
வித்யா தேவி (சி.பி.ஐ):- வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தீர்மானம்
ஆனந்த் (தி.மு.க.):- செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.
துணைத்தலைவர்:- பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக நோட்டீஸ் மற்றும் ஆட்டோ விளம்பரம் செய்ய வேண்டும்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை சிதம்பரம் சாலையில் கீழவீதி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர்:- உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறைவேற்றப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






