மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
x

விருதுநகரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்

விருதுநகர் தேசபந்து திடலில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அனைத்து கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்கலாம். கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமாகவும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமாகவும் மழை நீர் சேகரிக்கப்படுகின்றன.

திறந்த வெளி கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடிகளில் இருந்து கொண்டு வரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் தொட்டிகளில் பாய்ச்ச வேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழை நீரை செலுத்தி சேகரிக்கலாம். பருவமழை காலம் தொடங்குவதற்கு தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மழைநீரை சேகரிப்பதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் பொதுமக்களுக்கு வினியோகித்தார்.

இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக என்ஜினீயர் கென்னடி, உதவி நிர்வாக என்ஜினீயர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story