வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்


வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறினார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 193 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. திருமருகல் ஒன்றியம் நரிமணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையாளராக கலந்து கொண்டு ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழகத்தலைவர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு, கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது.

எதிர்வரும் பருவமழை காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக் கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்திட வேண்டும்.

விழிப்புணர்வு

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகளில் அடைப்புகள் ஏதுமின்றி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு குக்கிராம அளவிலும் துண்டு பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் மற்றும் ஊர்வலங்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ரஞ்சித் சிங், உதவி இயக்குனர் ஊராட்சிகள் மோகன சுந்தரம், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவஹர், பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உத்தமசோழபுரம்

அதேபோல் உத்தமசோழபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமையிலும், திருமருகலில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையிலும், திருப்புகலூரில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமையிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


Next Story