மாயமாகி போன மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்


மாயமாகி போன மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பயன்பாடின்றி கிடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பயன்பாடின்றி கிடக்கிறது.

மழைநீர் சேகரிப்பு தொட்டி

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அப்போதைய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகி செல்வதை தவிர்த்து பூமிக்கடியில் சேகரித்து வைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து கோடைக்காலங்களில் போதுமான தண்ணீர் கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை உணர்ந்து இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், வீடுகள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு அவை முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி பல்வேறு அரசு அலுவலங்களில் இன்று மாயமாகி போன நிலையில் அந்த தொட்டிகள் இருந்த இடமே தெரியாத அளவு மண்ணால் புதைத்தும் காணப்படுகிறது.

மாயமாகி போனது

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சார்நிலை கருவூலங்கள், சார்நிலை அலுவலகங்கள், வருவாய் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களில் தொடங்கப்பட்ட இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் தற்போது மண்ணுக்குள் புதைந்தும், சில இடங்களில் மேல் இருந்து பூமிக்கு மழைநீரை கொண்டு வரும் குழாய்கள் உடைந்தும், சில இடங்களில் சிலாப்புகள் மூடப்பட்ட நிலையிலும் பயன்பாடும் இன்றி காணப்படுவது வேதனையை தரும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் பெய்யும் மழைநீர் பூமிக்கடியில் செல்ல வழியில்லாமல் கால்வாய் வழியாகவும், வாய்க்கால் வழியாகவும், பல்வேறு நீர்நிலை வழியாகவும் கடலுக்கு செல்வதால் பல்வேறு இடங்களில் தண்ணீரை சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் மட்டம் குறையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மீண்டும் செயல்படுத்த வேண்டும்

இதுகுறித்து சமூக ஆர்வலர் கார்த்திகேயன் (காரைக்குடி கணேசபுரம்) கூறுகையில், தமிழகத்தில் மழைக்காலங்களில் மழைநீரை பூமியில் சேகரித்து வைத்து கோடைக்காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருப்பதற்காக அரசு அலுவலங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சேகரிப்பு தொட்டி இல்லாமல் மாயமாகி போனது. இதனால் வரும் காலங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாக காரணமாகும். எனவே தமிழக அரசு மக்கள் நலன் கருதியும், எவ்வித பாகுபாடும் இன்றி மீண்டும் இந்த திட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது ஆசிக் (இயற்கை ஆர்வலர்):- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மழைநீர் சேகரிப்பு தொட்டி என்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் சேகரித்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. அவற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டியது அரசு மற்றும் அனைவரின் கடமையாகும். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு பாகுபாடின்றி உடனடியாக மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம்

வக்கீல் டி.எஸ்.சரவணன் (சிவகங்கை):- நிலத்தடி நீரை அதிக அளவு எடுத்ததால் நீர்மட்டம் மிக குறைந்து நிலத்தில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இயற்கை கொடுத்த வரமான தண்ணீரை மீண்டும் பூமி தாய்க்கு திருப்பி கொடுக்கும் பழக்கமாக இந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது மக்களிடம் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த ஆர்வம் குறைந்து வருகிறது.

பல இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மூடப்பட்டு வருகின்றன. நீரை சேமிப்பது குறித்து ஒவ்வொரு தனி நபரும் தனக்கு கடமை உள்ளது என நினைக்க வேண்டும். எதிர்காலத்தில் நமது தலைமுறையினர் தண்ணீர் இல்லாமல் என்ன செய்வார்கள் என்று நாம் எண்ண வேண்டும். தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. எனவே, இப்போது மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் அரசும் மதுபானங்கள் விற்பனைக்கு நிர்ணயம் செய்வது போல, மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கும் குறியீடு நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த வேண்டும் என்றார்.


Next Story