ஓடைகளில் கரைகளை தொட்டு ஓடும் மழை நீர்


ஓடைகளில் கரைகளை தொட்டு ஓடும் மழை நீர்
x

ஈரோட்டில் உள்ள ஓடைகளில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் உள்ள ஓடைகளில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பல இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்து கொண்டு இருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி இருந்தது.

நேற்று முன்தினம் பதிவான மழை அளவான 108 மி.மீட்டரை ஒப்பிடும் போது 3-ல் ஒரு பங்கு அளவுதான் நேற்றைய தினம் பதிவாகி இருந்தது.

ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம் மழைத்துளிகள் விழுந்த சில நிமிடங்களிலேயே ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. காலையில் சாலைகளில் வெள்ளம் வடிந்து இருந்தது. ஆனால், பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கியது.

ஓடைகளில் வெள்ளம்

ஈரோட்டின் முக்கிய ஓடைகளாக பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை மற்றும் ரங்கம்பாளையம் ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே 4 நாட்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடி வரும் நிலையில் இந்த சாக்கடைகளில் கிடந்த அசுத்தங்கள் அடித்துச்செல்லப்பட்டு, நேற்று மழை நீர் சுத்தமாக ஓடியது.

இதுபோல் நன்னீராக இந்த ஓடைகள் ஓடிக்கொண்டு இருந்ததால் ஈரோடு மாநகர் பகுதியில் சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கும். எனவே இந்த சூழலை பயன்படுத்தி, ஓடைகளில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். மேலும் கழிவுகள் நீரோடைகளில் கலப்பதை தடுத்து, பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாதிப்பு

அதே நேரம் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி பல பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். பூந்துறை ரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் சாலையில் தண்ணீர் நிரம்பி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மாறியது.

இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இங்கு சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதாகவும், மழை நீர் வடிகால்களில் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு அடைப்பு ஏற்பட்டு இருப்பதாலும் இதுபோன்று பாதிப்பு இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாதாள சாக்கடை

ஈரோடு பெரியவலசு மாணிக்கம்பாளையம் ரோட்டில் தொடர்ச்சியாக பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவு நீர் கொப்பளித்து வெளியேறியது.

இதனால் நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கழிவு நீர் காரணமாக துர்நாற்றமும் வீசியது. இதுபோல் மாநகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து தண்ணீர் கொப்பளித்து வெளயேறியது.

வீடுகளை சூழ்ந்தது

பூந்துறை ரோடு செட்டிபாளையம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து வெள்ளம் தேங்கி நின்றதால் அந்த பகுதியினர் சிரமப்பட்டனர். பெரிய சேமூர் சோழா நகர் பகுதியிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. ரங்கம்பாளையம் ரெயில்வே நுழைவுபாலம், வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவுபாலம், ஆனைக்கல்பாளையம் ஈரோடு ரோடு என்று பல பகுதிகளிலும் வெள்ளம் குட்டையாக தேங்கியது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டர் அளவில் வருமாறு:-

மொடக்குறிச்சி-92

ஈரோடு-38

கவுந்தப்பாடி-36

அம்மாபேட்டை-27.2

கோபி-25.4

கொடுமுடி-24

குண்டேரிபள்ளம்-21.2

வரட்டுப்பள்ளம்-21.2

பெருந்துறை-21

சென்னிமலை-20

பவானி-14

எலந்தைகுட்டை மேடு-13.4

சத்தியமங்கலம்-8

கொடிவேரி-7.2

பவானிசாகர்-5.8

நம்பியூர்-2

மேற்கண்டவாறு மழை அளவு பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் அதிக பட்சமாக மொடக்குறிச்சியில் 92 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.


Next Story