ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


ரஜினிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
x

கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுவதை தமிழ்நாடு ஏற்குமா? என்றும், நடிகர் ரஜனிகாந்த் பேசியது வருத்தம் அளிக்கிறது என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கருணாநிதி முதல்-அமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். விழாவில், நிறைவாக கருணாநிதி பேசும் போது, வள்ளலுக்கு எல்லாம் வள்ளல் திராவிட கர்ணன் என்று பெயர் சூட்டியவரே அவர் தான். என்னைப் போன்றவர்களை உயர் பதவியில் வைத்த அழகு பார்த்தவரும் எங்கள் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். என்று கருணாநிதி சொன்னார். இது தான் வரலாறு.

ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கமல் ஹாசன் பேசியது கூட பெரிதல்ல, அவர் எப்போதோ விக்ரம் படத்தோடேயே அவரது வாயை தி.மு.க.வுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்.

ஆனால், எப்போதும் நேர்மையாக பேசக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு கருத்து சொன்னது வருத்தமாக உள்ளது. அவரும் தி.மு.க. ஆட்சிக்கு பயந்து ஏ.வி.எம். தயாரித்த 'சிவாஜி' படத்தை அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி அந்த படத்தை தங்கள் நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை என்பதற்காக முதல் நாளே சி.டி.யை வெளியிட்டதால் அந்த படம் மிகுந்த பாதிப்படைந்தது. அதோடு ஏ.வி.எம். படம் தாயாரிப்பதையே விட்டுவிட்டனர். அது போன்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக நடிகர் ரஜினிகாந்தும் பேசிவிட்டார் என்பது தான் வருத்தமாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story