பொன்விழாவையொட்டி அஞ்சலக ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின் 50-ம் ஆண்டு பொன்விழாவையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை மற்றும் டாக்டர் சங்கரன் சாலை வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சலகத்தில் முடிவற்றது.
இதில் கோட்ட, தலைமை அஞ்சலக, துணை அஞ்சலக மற்றும் கிளை அஞ்சலக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இவர்கள் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள், சிக்கனத்தின் நன்மை மற்றும் சுற்றுப்புற தூய்மை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பொன் விழாவை மேலும் சிறப்பாக்கும் வகையில் நாமக்கல் கோட்டத்தில் உள்ள அஞ்சலங்களில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் கடந்த 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற மேளாவில் சிறப்பாக பணியாற்றி அதிக கணக்குகளையும், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு தொகைகளை பிடித்தும், 5 ஆயிரம் ஆதார் திருத்தங்கள் மேற்கொண்டும் சிறப்பிடம் பிடித்த அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையொட்டி 50 ஆண்டு காலகட்டத்தில் நாமக்கல் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.