கோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்


கோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2024 9:05 AM GMT (Updated: 21 Jan 2024 10:47 AM GMT)

அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.இதனை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் அந்த பதிவில், 'ஜனவரி 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதி மந்திரி திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது' என பதிவிட்டுள்ளார்.


Next Story