ராமஜெயம் கொலை வழக்கு; அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 5 பேருக்கு பரிசோதனை
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 5 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ராமஜெயம் கொலை வழக்கு
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அவர்கள் பல்வேறு இடங்களிலும், பல்வேறு நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உண்மை கண்டறியும் சோதனை
இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தேக நபர்களான சத்யராஜ், திலீப் என்ற லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா என்ற குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து, தென்கோவன் என்ற சண்முகம், மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்தனர்.
இதற்கு அனுமதி கேட்டு திருச்சி ஜே.எம்.-6 கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்தனர். அப்போது 13 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அதில் தென்கோவன் என்ற சண்முகம் தவிர மற்ற 12 பேரும் தங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனை
இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருத்துவ அறிக்கையை நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு சிவகுமார் உத்தரவிட்டார். அதன்படி சாமி ரவி, திலீப் என்ற லட்சுமி நாராயணன், சிவா, ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய 6 பேருக்கும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் நேற்று முன்தினம் காலை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து மீதமுள்ள நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கும் நேற்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவர்கள் நேற்று காலை தங்கள் வக்கீல்களுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, இதய பரிசோதனை மற்றும் மனதளவில் சீராக உள்ளனரா? என்பது குறித்த பரிசோதனையை 5 டாக்டர்கள் கொண்ட குழுவினர் மேற்கொண்டனர்.
கோர்ட்டு அறிவிக்கும்
இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் கேட்ட போது, 12 பேருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்துவிட்டது. டாக்டர்கள் கொடுக்கும் மருத்துவ அறிக்கையை திங்கட்கிழமை (நாளை) திருச்சி ஜே.எம்.-6 கோர்ட்டில் தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் யார், யாருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம் என்றும், எப்போது நடத்தப்படும் என்றும் கோர்ட்டு அறிவிக்கும். அதன் பிறகே சென்னையில் அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும் என்றனர்.