கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி


கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 28 Jun 2023 6:46 PM GMT)

கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன

ராமநாதபுரம்


கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

இழப்பீடு வழங்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் அபு அயூப். இவருக்கு உச்சிப்புளி அருகே உள்ள என்மனம் கொண்டான் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த 1992-ம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக கையகப்படுத்தினர். இதற்கு ஒரு சென்ட்க்கு ரூ.107 என விலை நிர்ணயம் செய்திருந்தனர். இந்த தொகை குறைவாக இருப்பதாக அபு அயூப்பின் பவர் ஏஜண்டான துல்கீப்கான் என்பவர் ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் கூடுதல் விலை நிர்ணயம் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி ஒரு சென்ட்க்கு ரூ.2 ஆயிரத்து 925 வீதம் தொகை நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த தொகையை வழங்க ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் எதிர்த்து மேல்முறையீடும் செய்யவில்லை. அதே நேரத்தில் தொகையையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து துல்கீப்கான் இந்த தொகையை வழங்க உத்தரவிடக்கோரி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பொருட்கள் ஜப்தி

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கதிரவன் மனுதாரருக்கு கோர்ட்டு உத்தரவுப்படி வழங்க வேண்டிய ரூ.21 லட்சத்து 124 தொகையை வட்டியுடன் சேர்த்து இதுவரை வழங்காத காரணத்தினால் ஆதிதிராவிட நலத்துறை அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் மனுதாரர் தரப்பு வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காத ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story