ராமசாமி கோவிலில் இன்று 4-வது புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
சீதாபிராட்டியை தேடி ராமபிரான் வந்து தங்கிய இடமான பொங்கலூர் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலில் இன்று 4-வது புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீதாபிராட்டியை தேடி ராமபிரான் வந்து தங்கிய இடமான பொங்கலூர் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலில் இன்று 4-வது புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராமசாமி கோவில்
பொங்கலூர் அருகே உள்ள அலகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பாளையத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். சாமியை தரிசனம் செய்வதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருப்பார்கள். இந்த ஆண்டும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இங்கு சீதாப்பிராட்டியை தேடி வந்த ராமபிரான், லட்சுமணன் ஆகியோர் குடில் அமைத்து தங்கியதாகவும் அந்த இடத்திலேயே பச்சை மண்ணால் செய்யப்பட்ட ராமர், லட்சுமணன், சீதாபிராட்டி மற்றும் கன்னிமார் சாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சிலை செய்யும் போது சிலைகளை சுடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் மழை வருவது போல் இருப்பதால் காலையில் அதனை செய்யலாம் என அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்றுவிட்டனர். இரவு பலத்த மழை பெய்துள்ளது. காலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்து பார்த்தபோது சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யாமல் இருந்துள்ளது. அந்த சிலையை அப்படியே எடுத்து புற்றுமண் இருந்த இடத்தில் வைத்து கோவில் கட்டி வழிபாடு செய்து வந்துள்ளனர்.
சிறப்பு ஏற்பாடு
நாளடைவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு தரிசனத்திற்காக வந்தனர். தற்போதும் இந்த கோவிலில் சூளைகளில் இருந்து எடுக்கப்படும் சாம்பலையே திருநீராக வழங்கப்பட்டு வருகிறது. சுவாமிக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவது கிடையாது. ஆஞ்சநேயருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இங்கு உள்ள வடக்கு விநாயகர், நாகநாதசாமிக்கு கண்னடக்கம் மற்றும் உப்பு, மிளகு ஆகியவை நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கி வருகிறார்கள். அவ்வாறு வழங்கும்போது கண் பார்வை நன்றாக தெரியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமர் வந்து தங்கிய இடம் என்பதால் இது ராமசாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.