தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைமுஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு


தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைமுஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
x
தினத்தந்தி 22 April 2023 7:00 PM GMT (Updated: 22 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரம்ஜான் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

தர்மபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினர்.

பாலக்கோடு- பென்னாகரம்

இதேபோல் தர்மபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

அரூர்

அரூர் பகுதியில் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் நேற்று காலை புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதையடுத்து காலை 7 மணி அளவில் மசூதியிலில் இருந்து முத்தவல்லி சபீர் அகமத் தலைமையில் செயலாளர் அப்துல் ரஷப், அலாவுதீன் பாட்ஷா ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் அரூர் பெரியார் நகரில் உள்ள தொழுகை மைதானத்தில் சென்று அங்கு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு பிரியாணி கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அரூர் கோட்டத்தில் 17 இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

ஆட்டுக்கறி விற்பனை

ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரும்பாலான முஸ்லிம்கள் ஆடுகளை வாங்கி அதனை வெட்டி ஏழைகளுக்கு ஆட்டுக்கறிகளை அன்னதானம் வழங்கினர். இதன் காரணமாக தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஆட்டுக்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் அனைத்து கறிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.


Next Story